மழைக்காலங்கள் வெகு சுவராசியமானவை, அழகானவை ஆளுயர சுவர்களுக்கு உள்ளே கனப்பில், கையில் அயல்நாட்டு சரக்கோடு சன்னல் வழி நீர்த்தாரைகளை ரசிப்பவர்களுக்கு
கார்த்திகை மார்கழி காலங்கள் கிராமத்தில் விவசாய கூலியாக மட்டும் வாழ்பவர்களுக்கு வெகு வறட்சியானவை. மழையும் சகதியுமாய் வானம் பார்த்த கூரைகள் நீரில் மூழ்கி , நிரந்தர வெம்மையை அடுப்புக்காணாது அதனுள் பூனைகள் உறங்கும் காலம் அவை.
கிராமமும் கிராமம் சார்ந்த மனிதர்களும் வெகு வித்தியாசமானவர்கள் பறவைகள் விதைப்பதுமில்லை சேமிப்பதுமில்லை என்கிற கணக்காய் கிடைக்கிற வரையில் எல்லாவற்றையும் உண்டு மகிழ்பவர்கள், குடித்துத்தீர்ப்பவர்கள் இந்த மழைக்காலங்களில் கைகளில் பணமில்லாமல் சேமிப்பில்லாமல் அண்டா குண்டா பாத்திரங்களை சேட்டுக்கடைக்கும் , கிடைக்கிற வட்டிக்கு பணம் வாங்கியும் பிழைப்பை நகர்த்தும் விவசாயக்கூலிகளுக்கு இந்த மழைக்காலம் சித்திரவதைகாலம்தான்.
இந்த காலக்கட்டத்தில் சாராயக்கடைகள் முதல் டீக்கடைகள் வரை ( சாராயக்கடைகள் எங்களூர் காரைக்காலுக்கு மிக அருகில் இருப்பதால் சாராயக்கடைகள் எப்போதும் உண்டு) காத்து வாங்கும். சாதாரண நாட்களில் நான்கு மணிக்கு டீக்கடைக்காரனுக்கு முன்னதாகவே அடுப்பை பற்றவைத்து ஒன்றுக்கு இரண்டாய் டீக்குடிக்கும் கிராமத்து பெருசுகள், அழுக்கு வேட்டியும் புகைப்படிந்த கண்களுமாய் உட்கார்ந்து மழைப்பார்க்கும் இந்த மாதங்கள் கொடுமையானவை.
வீட்டுக்கு வீடு முருங்கை கீரைகள் தினமும் உணவில் இருக்கும், கீரைத்தண்டு, முருங்கைக்காய்கள் இல்லாத குழம்பு தேடினாலும் கிடைக்காது. நாட்டு மீனும் , வயல் நண்டும் வகை தொகையில்லாமல் சாப்பிட கிடைக்கும். தை வரட்டும் வட்டியும் மொதலுமா கட்டிப்புடலாம் என்கிற சம்பாசணைகள் கடன் வாங்கிற எல்லா இடங்களிலும் தவறாமல் கேட்கும். விதை நெல்லை காயவைத்து , அரிசி அரைக்கும் நடவடிக்கைகள் நடக்கும். ஓசியில் கொடுத்த கடன் அரிசி திருப்பி வாங்கும் நடவடிக்கைகளில் தாயும் பெண்ணும் சண்டையிடும் நிகழ்வுகள் சாபங்களோடு விரியும். பரங்கிக்காய் , பூசணிக்காய்கள் திருடப்படும். காட்டுக்கருவை மரங்களின் வேர்ப்பறிக்கும் சாகசங்கள் நடைபெறும். ஈர விறகுகள் சாராயக்கடைக்கும் டீக்கடைக்கும் ஒன்றுக்குப்பாதியாய் விலைப்போகும்.
வளர்த்தக்கோழிகள் சீக்கில் சிக்குண்டு சாகும், ஆடுகளுக்கான கோமாரித்தாக்கும். எல்லா பக்கமும் இழப்பும் , குளிர்த்தாங்காத கிழங்கட்டைகளின் சாவும் பெரிதான ஒப்பாரியின்றி அடக்கம்பெறும். சாவுக்கு வந்தா ஒரு வாய் சாராயம் கூட வாங்கித்தர வக்கில்லாதவன் என்கிற வசவுகள் தவறாமல் இடம்பெறும். தைமாசம் பொண்ணு சடங்கு வச்சிரேன், வா மச்சான் நாலு ஆட்டுக்கடாவும் நல்லாத்தூர் சாராயமாவும் ஒரு வாரம் பத்து நாளு இருந்துட்டு போயிடலாம் என்கிற சமாதானங்கள் நிறைய கேட்கும்.
சேமிப்பும் பழக்கமோ , சிக்கன நடவடிக்கைகளோ அவர்களுக்கு தெரிவதேயில்லை. கிடைக்கும் கூலியில் சாராயமும் , சாப்பிடுவதுமாய் வாழும் மனிதர்கள், மழைக்கால ஈரத்தில் குன்னிப்போய் ஒரு டீ குடிக்க கடனுக்காய் காத்திருப்பது மிக சாதாரணமானது. மழை வெள்ள சேதம் பார்க்க மந்திரிகள் வருவார்கள், சிரித்த முகத்தோடு போட்டோவுக்கு போஸ்ஸும், அன்றைய தின சரக்குக்கு காசுமாய் கடந்துபோவார்கள்,விழுந்த எல்லா குடுசைகளுக்கும் இழப்பீடோ பணமோ எப்போதும் கிடைக்காது. ஆளுங்கட்சியின் அல்லக்கைகள் மட்டும் வருடம்தோறும் வாங்கிக்கொள்வார்கள். ஊருக்கு நான்கு பேர் என்கிற கணக்குகள் அரசு அதிகாரிகளுக்கே புரியும்.நாற்றம் பிடித்த அரிசியில் சமைத்த நிவாரண சாப்பாட்டுக்கு எவர்சில்வர் வாளிகளில் முண்டியடிக்கும் மனிதர்கள் எப்போது வராமல் போவார்கள்.
உடைகின்ற ஆறுகள், மூழ்கும் வயல்கள், அடித்துச்செல்லப்படும் குடிசைகள் எவன் வந்தாலும் ,ஆண்டாலும் ,போனாலும் மாறாமல் வருடந்தோறும் நிகழ்கிறது .
பொருளாதார முன்னேற்றங்கள் கிராமங்களில் நடுத்தர குடும்பங்களில் எதிரொலிக்கத்துவங்கி விட்டதன் பலன் ,கடனுக்காய் அலையும் மனிதர்கள் கிராமங்களில் குறைந்து விட்டார்கள். முழு மூச்சாய் விவசாயக்கூலியாய் மட்டும் வாழ்பவர்களின் கதறல் மழைக்கு மழை விடாமல் கேட்கிறது. வெவ்வேறு வேலைகளுக்கு மாறியவர்கள் மெதுவாய் ஆனால் நிரந்தராமய் மாற்றம் பெற்று வருகிறார்கள். பம்பாய் சண்டை பாத்தியாடா, சும்மா டுமில் டுமில்னு சுடுறாண்டான்னு செல்பேசி பேச்சுக்கள். வயல் எல்லாம் மூழ்கிடுச்சு இனி ஒண்ணும் தேறாதுப்பா தை மாசம் எல்லாம் எதும் எதிர்பார்க்க முடியாது.வட்டிக்கு கட்டவே எனக்கு இன்னும் இருவதாயிரம் தேவையாருக்கும், மண்ணுல போட்டது தண்ணியோடு போயிடுச்சு, நீயே பார்த்து சாப்பாட்டுக்கு அரிசி வாங்கிக்கொடுத்திடு என்கிற நிகழ்கால வார்த்தைகளின் முடிவில்
மழை பெய்துக்கொண்டிருக்கிறது ஓயாமல்
தொடர்ந்து பெய்கிற(கொட்டுகிற)
மழையை ரசிக்க முடிவதில்லை என்பது என் எண்ணம்...
தமிழன்-கறுப்பி... said...
December 01, 2008 2:48 PM
மழையும் வெள்ளமும் அதிகம் கைவைப்பது இவர்களுடைய வாழ்வில்தான்... :(
தமிழன்-கறுப்பி... said...
December 01, 2008 2:49 PM
"மண்ணுல போட்டது தண்ணியோடு போயிடுச்சு, நீயே பார்த்து சாப்பாட்டுக்கு அரிசி வாங்கிக்கொடுத்திடு என்கிற நிகழ்கால வார்த்தைகளின் முடிவில்
மழை பெய்துக்கொண்டிருக்கிறது ஓயாமல்"
இதுவும் நிதர்சனம்தான்....
கிருத்திகா said...
December 01, 2008 3:21 PM
எல்லா மழைக்குள்ளிருந்தும் லேசான விசும்பல் பட்டுத்தெரிக்கலாம்.
மழையின் அத்தனை தோற்றங்களிலும் தெரிவது ஒன்றுதான் மின்னல் வெளிச்சத்தில் மறையும் அதன் கண்ணீர்!
நல்ல பதிவு....படிக்கிறபோது லேசான குளிரை மறைக்க முடியவில்லை!
அன்புடன்,
ஆர்.நாகப்பன்.
ஆர்.நாகப்பன் said...
December 01, 2008 3:54 PM
நன்றிங்க தமிழன் கறுப்பி, கிருத்திகா, ஆர் நாகப்பன்
கென்., said...
December 01, 2008 4:24 PM
உண்மை முகத்துல அறையுது...
விஜய் ஆனந்த் said...
December 01, 2008 10:08 PM
எளிய மக்கள் மீதான உங்கள் அக்கரை உங்களின் எழுத்தில் தெரிகிறது.
நல்ல பதிவு.
நாடோடி இலக்கியன் said...
December 04, 2008 8:01 PM