Monday, May 25

டாஸ்மாக்கிலிருந்து டான்ஸ்பார் வரை


வெக்கை நிறைந்த பாலைவனத்தின் நடுவாந்திர தேசமிது. ஒரு பக்க கடலும் கொதிநீர் அலைகளால் மோதும்,வெப்பமூறிய காற்றில் முகம் கருகிப்போகும்.எங்கிருந்து வருகிறது எனத்தெரியாத ஒரு சிறு பறவையின் சிநேகம் எனக்குக்கிடைத்திருக்கிறது.

ஓமன் ரியாலின் மதிப்பு கூடியோ குறைந்தோ போகையில் அதனிடம் சொல்லிப்போவதுண்டு, என் மொழி புரிந்த மாதிரி ஒரு பக்கமாய் இறக்கையடித்துப்பறக்கும். எதனிடமும்/ எவரிடமும் ப்ரியம் காட்டிட தெரியாத என் முன் கோபங்கள் இப்போது வெகுவாய் குறைந்திருப்பதாய் நான் நினைத்துக்கொண்டேன் அந்த பறவையும் அப்படித்தான் சொல்லி சிறகடித்தது.மெதுவாய் என் சமூக மதிப்பு பெருமளவில் உயர்ந்திருப்பதை அம்மாவின் சந்தோசக்குரலில் ஒவ்வொரு முறை தொலைப்பேசி உரையாடலில் தெரிந்துக்கொள்ள முடிகிறது.நிறைய தூரத்து உறவுகள் இப்போதெல்லாம் மிக நெருக்கமாகிவிட்டதாக சொல்லிக்கொண்டிருக்கிறாள். இந்திய ரூபாயில் கணக்கிடப்படும் என் வருமானம் பெருமளவுக்கு சமூக மதிப்பை உயர்த்தியிருக்கிறது என்பதை என் செல்ல பறவையிடம் சொல்ல தேடிக்கொண்டிருக்கிறேன்.


நான் என்னைப்பற்றி எழுதுவதாக
எல்லோரும் சொல்கிறார்கள்
நான் உங்களைப் பற்றி எழுதுகிறேன் என்பது
உங்களுக்கு மட்டும்தான் தெரியும். --- சாராயக்கடை கவிதை தொகுப்பில் ரமேஷ் பிரேதன்

ஒரு கதையாடலை எதன்மூலமும் தீர்மானிப்பதில்லை நான். எந்த வரையறைக்குள்ளும் திணிக்கவோ அழுத்திவைக்கவோ முயற்சிப்பதோ அல்லது ஆராயவோ முடிவதில்லை . இந்த முப்பது வருடங்களில்(இருபத்து ஒன்பது வருடம் ஆவதற்கு,ஒரு மாதம் ஒரு நாள் இருக்கிறது) என் பால்யத்தில் நிகழ்ந்த என்னைப்பாதித்த சிலவற்றை புனைவில் சொல்ல முயற்சித்திருக்கிறேன், அதற்கு பிறகாய் நிறைய எழுதியவை காதலின் தோல்வியும் அதன் வலியும் நிராகரிப்பும். எல்லா ஆண்களுக்குமான எல்லா தோல்விகளும், குரூரங்களும் எனக்குள்ளும் நிரம்பி வழிவதால் இது நிகழ்ந்திருக்கலாம். மிக உன்னத நிலையில் தேவ தூதர்களாய் திகழ்வதாய் நினைக்கும் சிலர்க்கு இதைப்பற்றி புரிய வைக்கவேண்டிய அவசியம் இருப்பதாய் எனக்குத்தெரியவில்லை. இந்த / அந்த புனைவில் சொல்லப்பட்டிருப்பவள் யாராய் இருக்கும் என மண்டையை உடைத்துக்கொள்பவர்களுக்கு எதைச்சொல்லி புரியவைக்க முடியும்.சிலர்க்கு வெறும் வாயில் மெல்லவே நேரம் போதாமலிருக்கையில் அவல் கொடுத்தால் என்னவாகும்.

கதை என்பது ஒரு ரகசிய புதிர் விளையாட்டு. நாம் அந்த விளையாட்டில் பாதியில் கலந்து கொள்கிறோம். பாதியில் விலகியும் விடுகிறோம். சொற்களின் வழியே உருவான ஒரு உலகை நாம் நிஜ உலகோடு அடையாளப்படுத்துகிறோம். அல்லது தவறவிடுகிறோம். எல்லோரது கதைகளின் அடியிலும் சுய சரிதையின் மெல்லிய நீரோட்டம் ஓடிக்கொண்டிருக்கிறது, அது எழுத்தாளன் மட்டுமே அறிந்த நதி - பதினெட்டாம் நூற்றாண்டின் மழை முன்னுரையில் எஸ்.ராமகிருஷ்ணன்.

மஸ்கட்டில் இருக்கும் நைல் டான்ஸ் பாரில் நான் நுழைந்தபோது இரவு 10 மணி ஆகியிருந்தது. மேடையில் எட்டுப்பெண்கள் உடலசைவில் ஆடிக்கொண்டும் நோட்டமிட்டும் கொண்டிருந்தார்கள். ஒரு மூலையைக் கைப்பற்றி அமர்ந்த பின்னர் நண்பர்கள் வழக்கம்போல எல்லாவற்றையும் ஆர்டர் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு ஹிந்திப்பாட்டுக்கும் மூவர் மூவராய் ஆடிக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு பார்வைக்கும் ஆட்படும் குடிமகன்கள் அவரவர்க்கு பிடித்தப்பெண்ணுக்கு ரியால் மாலையிட்டுக்கொண்டிருந்தார்கள்(எவருக்கு தரவேண்டியதோ கையை உயர்த்தினால் ஒருவர் வந்து தாளில் குறித்துக்கொண்டு போய் அந்த பெண்ணிடம் தருவார், கடைசியில் நமது கணக்கில் அதை சேர்த்து கட்ட சொல்லிடுவார்கள்). எனக்கான இடத்தில் புதிதாய் இந்தியாவிலிருந்து வந்தவன் இருந்தான், அவனுக்கோ எல்லா பெண்களுக்கும் ஆளுக்கு ஆயிரம் ரியால்கள் தந்திடும் அளவுக்கு ஆசையிருந்தது. மெதுவாய் சொல்லிக்கொண்டிருந்தேன், பணத்தின் மதிப்பு, ஓமனின் சட்டங்கள், அலுவலுக தில்லுமுல்லுகள், அரசியல்கள் போட்டுக்கொடுத்தல்கள் என சிறிது நேரம் கழித்து யோசித்துப்பார்க்கையில் நான் ஒரு ஐம்பது வயதுக்காரரின் நிலையில் பேசிக்கொண்டுருப்பதை என்னால் உணர்ந்துக்கொள்ள முடிந்திருந்தது.

ஏசியின் குளிர் தாண்டியும் வேர்க்கத்துவங்கிய இடத்திலிருந்து விரைந்து வெளியேறிட மனம் துடிக்கத்துவங்கியது. அடுத்தடுத்த சுற்றுகளில் ஏறத்துவங்கிய போதையில் அவனவனுக்கான காதலும் , காமமும் அதன் தோல்விகளும் அம்மணமாக ஆடத்துவங்கியது. உனக்கு ஏன் பெண்களை பிடிப்பதில்லை என்ற கேள்விக்கு எனக்கு பதில் சொல்ல ஏதுமில்லாமல் வாய்மூடி மெளனியாயிருந்தேன். எனக்குப்பிடித்த பெண்களையெல்லாம் யோசிக்கத்துவங்கினேன்.
கடைசி வரிசையில் ஆடுக்கொண்டிருப்பவளை எனக்கு வெகுவாய் பிடித்திருந்தது, அவள் தன் கலையும் தலைமுடிகளை ஒரு கையால் ஒதுக்கி விட்ட படி வெகு நளினமாக ஆடிக்கொண்டிருந்தாள், ஏதாவது ஒரு வட இந்திய கிராமத்தின் மூலையிலிருந்து தன் குடும்பத்தாரின் பசி தீர்க்க இங்கு ஆடிக்கொண்டிருக்கிறாள், தான் என்ன வேலை செய்வதாக சொல்லியிருப்பாளோ திடிரென அவளின் நிலைக்குறித்த கவலை அரிக்கத்துவங்கியது.அதனோடே அவளின் பெருத்த தனங்களைக்குறித்த காமமும் நிழாலாடத்துவங்கியது.

அங்கிருந்து கிளம்பும் வரை என்ன டான்ஸ் இது ஒன்னும் சரியா காட்டல, இதுக்கு வந்திருக்கவே தேவையில்லை என்றெல்லாம் கண்டபடி புலம்பிக்கொண்டிருக்கிறவனை கொலை செய்யவேண்டும் என்கிற உணர்வை என்னால் நிறுத்திட முடியவில்லை, வண்டையாய் புரண்ட கோபத்தை மறைத்தபடி மெதுவாய் அறையை நோக்கிப்போய்க்கொண்டிருந்தேன்.

இரவின் கனவில் வந்தாள் அந்த பெண்., 30 ரியாலுக்காய் பேரம் பேசிய அதே பெண்.
உயிர்பசி உடல் திணை
சுழி வலம்
மனம் பிணம்

பெண் நிழல் பெரும் தணல்
நினைந்திட
தினம் கொல்லும்

5 சொல்லிட்டுப்போனவங்க:

seikai saravanan said...

Nalla irukku ken. Neraiya ezhuthunga.

Joe said...

நல்ல பதிவு கென்.

ஆடுக்கொண்டிருப்பவளை --> ஆடிக்...

//
ஏதாவது ஒரு வட இந்திய கிராமத்தின் மூலையிலிருந்து தன் குடும்பத்தாரின் பசி தீர்க்க இங்கு ஆடிக்கொண்டிருக்கிறாள்
//
இதே கருத்தை ரஷ்ய நாட்டு பெண்கள் குறித்து சொல்லப் போய் எள்ளி நகையாடப்பட்டேன், டோக்யோவின் நிர்வாண நடன விடுதியின் வெளியே.

Manalveedu said...

vanakkam ken
yethukku intha kelattu thanam. manda moolakkettu poacha?neenga yeppairpatta youth?marunthutingala?
unga address anuppunga dubaila irukkara friend moolalam manal veeda koduthu anuppa solren. take care
hari

D.R.Ashok said...

தினம் கொல்லும்
நினைந்திட
தரும் தணல்
பெண் நிழல்

சபாஷ் கென்

sharav said...

//
உயிர்பசி உடல் திணை
சுழி வலம்
மனம் பிணம்

பெண் நிழல் பெரும் தணல்
நினைந்திட
தினம் கொல்லும்
//
அருமை கென். தொடருங்கள்.
-சரவ்.

Post a Comment