Wednesday, December 2

எனக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது


குழந்தைப்பிறந்த கடந்த ஒன்பது மாதங்களில் அவளின் சிணுங்கல், கொஞ்சல், அழுகை என எல்லாமே போட்டோக்களாகவும் வீடியோக்களாகவும் பார்த்து சேகரித்து வைத்திருக்கிறேன். மனைவியின் போக்கில் நிறைய மாறுதல்கள், எல்லாவற்றுக்கும் எரிச்சலடைகிறாள், உடல் வலிகள் பிரசவக்களைப்பு என்பதையெல்லாம் மீறி என் அருகாமையில்லாததன் தவிப்பு கோபமாக உருக்கொண்டலைகிறதை தெரிந்துக்கொண்டேன்.
நேற்று வரைக்கும் நீ எப்போது கேட்டாலும் உன் ஏழுத்தலைமுறைக்கும் விசா தருவதாய் சொன்னவர்கள் கடந்த இரு மாதங்களாக இழுத்தடித்துக்கொண்டிருக்கிறார்கள்.நானும் முட்டி மோதிக்கொண்டிருக்கிறேன். தினமும் பேசும் நெட்போனின் பேச்சுக்களில் பல ஏக்கங்கள், தாபங்கள் ஏறிக்கொண்டே போகிறதே தவிர எதுவும் குறைவதாயில்லை. என் பெண் ரோஜாக்களின் இதழ்களாய் குட்டி விரல்களால் முகம்பொத்தி பால்குடித்த களைப்பில் வாயில் வழியும் எச்சிலோடு ஒரு சிறு பூவாய் படுத்திருக்கும் போட்டோ என் நெஞ்சோடு என் பெண்ணை அணைத்துக்கொள்ள துடிக்கும் தவிப்பிற்கு போதுமானதாயில்லை.

பொண்டாட்டியோ வழக்கத்திற்கு மாறாய் திட்டிக்கொண்டிருக்கிறாள். ஒரு பத்து நாள் லீவுப்போட்டுட்டு வந்து பாக்கனும்னு துப்பில்ல, செல்லம் தங்கம்னு போன்ல கொஞ்சுறான் போடா என்கிறாள். வேலைக்கொடுமையில் மொத்தமாய் வீட்டிற்கே அனுப்பிடும் சூழலில் எதை விடுவது எதை பார்ப்பது என்பதையெல்லாம் நிதானமாய் எனக்கு சொல்லிக்கொடுத்தவள் இன்று பொறுமையிழந்துக் கொதிக்கிறாள். காதலும் அதனின் தீராத அன்பிலும் வந்தவள். எந்த நெருக்கடியிலும் என்னை ஒரு நொடியும் விட்டுக்கொடுக்காதவள். ஒரு குட்டிப்பெண்ணின் அடாவடித்தனத்துடன் எப்போதும் அடம்பிடித்தவளுக்கு ஒரு குழந்தை வந்திட்டதை என்னால் நம்பிட முடியவில்லை. அவளுக்கு விடியற்காலை என்பதே எப்போதும் ஒன்பது மணிதான், எட்டு ஐம்பதுக்கு நான் அலுவலகம் போகும் அவசரத்தில் எல்லாவற்றையும் திசைக்கொன்றாக எறிந்த்துக்கொண்டிருக்கையில் வெகு நிதானமாக புத்தனின் தியானமாய் எழுபவள். காப்பி போட்டீயா,டீ போட்டீயா என்கிற கேள்விகள் வேற. ஆடை அலங்கோலங்களைக்கூட மாற்றிக்கொள்ளாமல் என் அலுவலக ஆடைகளைக்குலைப்பதையே கொள்கையாகக்கொண்டவள், இன்னைக்கு பாப்பா தூங்கறதேயில்லடா எப்போ எழுந்துக்கிறா எப்போ பசியில அழறான்னு பாத்துக்கிட்டே இருக்கேண்டா, இப்போல்லாம் ஆறு மணிக்கெல்லாம் எழுந்து ரெடியாகிறேன் தெரியுமா, அவளைப்பாத்துக்கவே ரெண்டு பேரு தேவையாயிருக்கு என்னைத்தவிர வேற யார்க்கிட்டேயும் ரெண்டு நிமிசம் கூட போக மாட்டேன்றா. அவ தூங்குகிற நேரமா குளிக்கிறேன் , சாப்பிடுறேன் உனக்கென்ன அங்க உட்கார்ந்துக்கிட்டு என் பொண்ணு என் பொண்ணுன்னு பெருமை பேசிட்டு இருக்கே. இந்தியாவுக்கு வா உன்கிட்ட அவளைக்கொடுத்திட்டு எங்க அப்பா வீட்டுக்கு ஒரு மாசம் போயிடுறேன் அப்போ தெரியும் பொண்டாட்டி அருமை என்றெல்லாம் திட்டிக்கொண்டிருப்பவளின் உள்மனம் எனக்கு மிக நன்றாய்த்தெரியும்.

காதலும் காமமுமான நாட்கள், எப்போது கோபத்தில் குரலுயர்த்தினாலும் இங்க வாடா, பொண்டாட்டிக்கிட்ட கத்துறான் என்கிற மெல்லிய குரலோடு இழுத்து தலைக்கோதியவளை நாலாயிரம் கிமீ இந்தப்பக்கம் அடிக்கிற அனல்காற்றில் எதைக்கொண்டு ஈடு செய்வது? டேய் நீ அப்பனாகிட்ட ஒழுங்கா நிதானமா இரு. வரவ போறவகிட்ட எல்லாம் பல்லைக்காட்டிட்டு இருக்காத. உன் மெயில் எல்லாம் செக் பண்ணிட்டே இருக்கேன் எதுவும் கோக்கு மாக்கு பண்ணினா எனக்கு அந்த நிமிசமே தெரிஞ்சிடும்
மவனே அடுத்த பிளைட் பிடிச்சி அங்க வந்திடுவேன் அதுக்கப்பறம் நீ என்கிட்ட அடிப்பட்டே சாகனும் இப்போ வெயிட் வேற எட்டு கிலோ அதிகமா இருக்கு என்றெல்லாம் மிரட்டுகிறவளிடம் என்ன சொல்ல?.காதலிப்பது என்பது ஒரு வித போதையில் மிதப்பது,திருமணம் என்பது தியானம் இப்படியெல்லாம் நிறையக்கேள்விப்பட்டதுண்டு. எங்களின் திருமணத்திற்கு பிறகும் நாங்கள் இருவருமே கணவன் மனைவி என்கிற பிரதாபங்கள் எதுவுமில்லாமல் காதலிக்கையில் எப்படி தினமும் அடித்துக்கொண்டிருந்தோமோ அதைவிட ஒரு மடங்கு மேலாக சண்டையிட்டுக்கொண்டிருக்கிறோம்.எல்லா நாட்களுமே எல்லா நேரங்களுமே சந்தோசத்தைத்தவிர வேறெதையும் எனக்கு தந்தவளில்லை அவள்.

காதல் திருமணத்தின் கோபதாபங்கள் எங்களுக்குள்ளும் பல நேரம் சண்டையை மூட்டிவிட்டு வேடிக்கைப்பார்த்தது. எல்லாம் தாண்டி இதோ என் மகள், என் செல்ல மகள். நானே இன்னும் சின்னப்பையனாட்டம்தான் இருக்கேன். ரோட்ல போன போற பொண்ணுங்க எல்லாம் என்னையே முறைச்சுப்பாத்து பெருமூச்சு விடுறாங்க
( இப்படிக்கூறுகையிலெல்லாம் உன்னை மாதிரி ஒரு கொரங்கு மூஞ்சியை அவங்க வாழ்நாள்ல பாத்திருக்கமாட்டாங்க அதான் விசித்திரப்பிராணின்னு பாப்பாங்கடா என்பாள்). உனக்கு என் அழகுல பொறாமைடி, கென்னு மாதிரி ஒருத்தன் கெடைக்கலையேன்னு அவளவள் அடிச்சிட்டு சாகிறா, நீ என்னடான்னா இப்படி சலிச்சிக்கிற வேணாம்னா இப்போ சொல்லுடி நான் ம்ம் சொன்னாப்போதும்னு வெயிட் பண்றவங்க இருக்காங்க ,என்கிற பீத்தல்களில் முகம் சிவந்து வாய்க்கொள்ளா சிரிப்போடு முகம்பார்க்கும் கண்ணாடி எடுத்து வந்து தருவாள். பாருடா அழகாம் உன் மூஞ்சில நீயே துப்பிக்கோ என்பாள்.

தினமும் நாட்கள் நரகத்தின் வாதையாய் நகர்கின்றன. செல்போனின் பேச்சுகளில் என் பெண்ணின் சிணுங்கல்களும் அவளின் அழுகைகளுமாய் அநியாயத்திற்கு தவிப்பை உண்ர்கிறேன். நான் தகப்பன் எனக்கொரு பெண் வந்திருக்கிறாள். என் மனைவியின் அழகை உரித்துக்கொண்டு , மூக்கு மட்டும் உன்னை மாதிரி இருக்காம் என்கிறவளை அறிவும் என்னை மாதிரிதாண்டி இருக்கும் என்கையில் ரொம்ப ஓவரா ஆடாத சீக்கிரமா வாடா, எனக்கு உன்னைப்பாக்கனும்டா என்று தாங்கிட இயலாமல் வெடித்து அழுகிறாள்.

ஒரு தகப்பனின் இடம் எத்தகையது என்பதை பரிபூரணமாக உணர்கிறேன். வெறும் வார்த்தைகளால் விவரிக்க இயலாத இந்த பந்தம் , என் காதல் திருமணத்தில் கோபத்தில் சாபமிட்ட என் மாமனாரின் வலி எத்தகையது என்பதை என்னால் எளிதில் உணரமுடிகிறது. சீக்கிரம் இந்தியாவிற்கு செல்ல வேண்டும் , முதலில் என் மாமனாரைப்பார்த்து அவரை சரி செய்யவேண்டும். மகளுக்கு வாங்கிய பொம்மைகள், ஜான்சன் பேபி பவுடர்கள், சோப், பீடிங்க்பாட்டில்கள் எல்லாம் பேக் செய்தாயிற்று. உனக்கு என்னடி வேணும் என்கிற கேள்விக்கு நீ வந்தா போதும்டா சீக்கிரம் வாடா குட்டி என்றவளுக்கு எது தேவை எது தேவையில்லை என்றெல்லாம் யோசிக்க முடியாமல் பார்த்ததையெல்லாம் வாங்கிவிட்டேன்.

இன்னும் என்ன தேவை என்ன தேவையில்லை என்று எதையும் முடிவு செய்ய முடியாமல், விடுமுறை அப்ரூவலுக்காய் அலைந்துக்கொண்டிருக்கிறேன். இன்னும் ஒரு வாரக்காலம் கழித்து மட்டுமே போக முடியும் என்கிற தகவலை வெகு சிரத்தையாய் பொய்க்கனிவோடு சொல்லிக்கொண்டிருப்பவளை வாய் நுனி வரை வந்திட்ட கெட்ட வார்த்தையை மறைத்து , “ சரிங்க நான் வேலையை முடிச்சிட்டுப்போறேன் “ என்கிறேன். உள்ளுக்குள் அரித்தெடுக்கும் ஆத்திரத்தை என்ன செய்வது.

போன் எடுத்தவுடனே கேட்கிறாள் என்னடா இன்னும் ஒரு வாரம் வேலை இருக்கா? எங்க அப்பா இன்னைக்குக்கேட்டார்டா, உன் புருசன் நிஜமாவெ பிசியா இருக்கானா? இல்லை சும்மா சீன் போட்டுக்கிட்டு இருக்கானா? குழந்தைப்பெத்து மறுபிறவி எடுத்திருக்க பொண்டாட்டிய பாக்கலேன்னாலும் பரவாயில்லை. பொண்ணு பொறந்திருக்கா, அந்த பிஞ்சு முகத்தைப்பாக்கனும்னு கூடவா தோணலை. இதுல லவ் மேரேஜ் வேற, வெளில சொன்னா வெட்கக்கேடுடின்னு திட்றார்டா. தயவு செஞ்சி சீக்கிரமா வாடா, என்னால இதுக்கு மேல தாங்க முடியாதுடா, நீயும் ஏழு மாசமா வரேன், வரேன்னு சொல்றதும் ஒரு நாள் கழிச்சு இன்னும் ஒரு வாரம் கழிச்சு வரேன்னு சொல்றதையும் கேட்டு கேட்டு எனக்கு சலிச்சுப்போயிடுச்சுடா. இங்க எல்லாருமே என்னடி உன் புருசன் இன்னும் ஒரு வாரம் கழிச்சு வரானான்னு கிண்டல் பண்றாங்க. புரிஞ்சிக்கோடா கென்னு என்கிறவளிடம் என்ன சொல்வதென்று தெரியாமல் பேசாமலிருக்கிறேன்.

டேய் நீயும் வருவே வருவேன்னு நான் இங்க என் ஆபிஸ் வேலையை வொர்க் ஃபிரம் ஹோம்ல பண்ணிட்டு இருக்கேன். நீ நிஜமா இந்தியா வரப்போ நான் ஆபிஸ்க்கு போக ஆரம்பிச்சிடுவேன், வந்து நீ மட்டும் பாப்பா பாத்துக்கிட்டு வீட்லேயே கெடக்கப்போறே அதான் உனக்கு பனிஸ்மெண்ட். எப்போ பார்த்தாலும் மூக்கு மேல கோவம் வரும் லூசுத்தனமா கத்திட்டே இருப்பே,இப்போல்லாம் நான் என்ன திட்டினாலும் பொறுமையா பதில் சொல்ற, என்னடா நடக்குது மஸ்கட்ல, புது பேம்லி எதும் செட் பண்ணிட்டியா? என்றெல்லாம் எதையே பேசிக்கொண்டிருக்கிறாள்.


மூன்றாவது முறையாக அறை விழுந்தது, எருமை மாடு வயசாச்சு இன்னும் குண்டில வெயில் படுற வரைக்கும் தூங்கிறான், என்ன கருமத்தைக்குடிச்சிட்டு வந்த, உன் மூஞ்சியப்பாக்கவே பிடிக்கலடா, எனக்குப்புள்ளையா ஏண்டா வந்துப்பொறந்த?
ஏழுக்கழுதை வயசாச்சு, ஒரு கல்யாணம் காட்சின்னு ஆயிருந்தா இன்னேரம் ரெண்டுப்புள்ள பெத்திட்டிருப்ப, ஒரு பொறுப்பு இருக்கா, உனக்கு அப்பறம் ஒரு தங்கச்சி இருக்காளே அவளை கரைசேக்கனும், வயசான காலத்தில அப்பன் சுமையக்குறைப்போம்னு இல்லாம, காதல் தோல்வியாம் கண்டதைக்குடிச்சிட்டு வந்து நைட் எல்லாம் பினாத்துறான், போடா போயி பஸ், ட்ரெயின்னு எதிலையாவது விழுந்து போயிச்சேருர வழியப்பாரு. அந்தப்பொண்ணு புத்திசாலி உன்னை மாதிரி கிறுக்குப்பயக்கிட்ட மாட்டிக்கிட்டு சாகாம தப்பிச்சிட்டா என்றவாறு தலைமுடியைப்பிடித்து இழுத்து ஆத்திரம் தீர அறைந்துக்கொண்டிருக்கும் என் அப்பாவைத்தாண்டி என் பெண்ணைத்தேடிக்கொண்டிருக்கிறேன். நீங்கள் இதை நம்ப வேண்டாம், என் பொண்டாட்டி எனக்காக காத்திட்டு இருக்கா. நான் மஸ்கட்ல கை நிறைய சம்பாதிக்கிறேன். என் பொண்ணுக்காக எல்லாத்தையும் வாங்கிட்டு இந்தியா போகப்போறேன். அடி வயித்தில் விழுந்த உதையில் சுருண்டு பின்புறமாக சுவற்றில் மண்டை மோதி விழுந்தேன். பிஞ்சுக்கால்களால் என் நெஞ்சில் குதியாட்டமாடுகிறாள் என் பெண். என்னடா கென்னு, ஏழு மாசமா வரேன்னு சொல்லி என்னை எப்படி ஏமாத்திட்ட நீ என்றவாறு இழுத்து அணைத்துக்கொள்கிறாள் என் மனைவி. மெல்ல அமிழ்ந்துப்போகிறேன் நான். ரத்தம் பெருக்கெடுத்து ஓடத்துவங்கிடுகிறது.

15 சொல்லிட்டுப்போனவங்க:

கென்., said...

இதே போன்ற ஒரு கதையை நான் எழுதி கல்கி வெளியிட்டிருக்கிறது. ஆக என்னோட கதையை நானே திருடிட்டேன் :)

☼ வெயிலான் said...

உணர்வுகளால் நிரப்பியிருக்கிறீர்கள்.

குழந்தையைக் காணும் பரிதவிப்பு எங்களுக்கும்.

அருமை கென்!

யாத்ரா said...

ரொம்ப நல்லா இருக்கு கென்.

கென்., said...

நன்றி வெயிலான் மற்றும் யாத்ரா :)

இளவட்டம் said...

நல்ல விவரிப்பு கேன்.ஒரு காதல் கல்யாணம் பண்ணினவங்களை கண் முன்னே நிறுத்திடிங்க.
ஆமா கல்யாணம் வேற ஆகலைன்னு சொல்றேங்க பின்ன எப்படி இப்படியெல்லாம்?

Mohan said...

ரொம்ப நல்லா இருந்துச்சுங்க‌ கென்! ஆனால்,கொஞ்சமே கொஞ்சமா 7G Rainbow Colony படம் ஞாபகத்திற்கு வந்துச்சு.

கென்., said...

நன்றி இளவட்டம் எல்லாம் ஒரு கேள்வி ஞானம்தான் :)

கென்., said...

நன்றி மோகன் இருக்கலாம் பாத்த படிச்ச படங்களை நினைவூட்டலாம் என் கதையோட தழுவல் இது :)

விக்னேஷ்வரி said...

காதல் கொஞ்சி விளையாடுவதை ரசித்துப் படித்துக் கொண்டே வந்தால் கடைசியாய் இப்படி ஒரு வலியா....

கென்., said...

நன்றிங்க விக்கி

வலியில்லாம காதல் இருக்கா என்ன ? :)

♠புதுவை சிவா♠ said...

ரொம்ப நல்லா இருக்கு கென்

its really very nice

thank you

நட்பு said...

மிக உருக்கமான கதை.. சொல்லபோனால் கதை என்றே என்னால் நம்பமுடியலங்க.
அந்த தவிப்புகளில் நானும் ஊறி போனேன்.. என்னை ரொம்பவே பாதித்துவிட்டது.

நட்பு
http://manathilpattavai.blogspot.com

கென்., said...

நன்றி புதுவை சிவா :)

கென்., said...

நன்றி நட்பு

sameera said...

eppadinga ippadi, no chance great

Post a Comment