பிக் பாக்கெட்: வழிப்பறிக் கொள்ளை: சினிமாத் திருட்டு
நன்றி : சாரு ஆன்லைன் (charuonline.com)
இழந்த காதல்
நின்று சலித்த
என் தோட்டத்து மரமொன்று
பின்னிரவில்
என் பிரியத்தின் இதம் வேண்டி
மெல்லப் படியேறி வந்தது
மரங்கள் நடப்பது
சாத்தியமில்லையென அறிந்திருந்ததால்
ஒரு விபரீதக் கனவென்று திகைத்து
வரவேற்கத் தாமதித்து விட்டேன்
ஆயிரம்
இலை நுனிகளால்
வேர் நுனிகளால்
புறக்கணிப்பின் துக்கம் ததும்பி
படியிறங்கிப் போகிறது
என் தோட்டத்து மரம்
மேலே கண்டுள்ள கவிதை மனுஷ்ய புத்திரன் எழுதி அவருடைய ’ நீராலானது ’ தொகுப்பில் வந்துள்ளது. அதோடு தினமணியிலும் வெளிவந்து பலரது கவனத்தையும் கவர்ந்த கவிதை இது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு சாரு நிவேதிதா எழுதிய ’ புதிய ’ கவிதை என்று போடுங்கள் என்று யோசனை சொன்னவரே மனுஷ்ய புத்திரன்தான். பொதுவாக திருட்டு கேஸில் மாட்டிக் கொண்டால் கூட்டாளியை மாட்டி விடுவதுதானே உலகப் பொது மரபு? அதன்படி, உண்மையைச் சொல்லி விட்டேன். மன்னித்து விடுங்கள்.
மனுஷ்ய புத்திரன் ஏன் அப்படி ஒரு ஐடியாவை எனக்குச் சொன்னார் என்றால், பருத்தி வீரன் அமீர் செய்துள்ள திருட்டைப் பற்றி என் நண்பர்களிடமெல்லாம் புலம்பிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் மனுஷ்ய புத்திரன் அந்த அருமையான ஐடியாவைச் சொன்னார். அதாவது, நான் அவருடைய கவிதை ஒன்றைத் திருடி என் கவிதை என்று சொல்லி வெளியிட்டு விட வேண்டியது. உடனே வாசகர்கள் எல்லோரும் என் இலக்கியத் திருட்டைக் கண்டு பிடித்து என்னை கன்னா பின்னா என்று திட்டுவார்கள். அப்போது நான் “பார்த்தீர்களா, திருட்டு என்றதும் எப்படிக் கோபம் வருகிறது? இப்படித்தான் அந்த அமீரும் திருடி இருக்கிறார் ” என்று சொல்லி அமீரின் திருட்டை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவது. இதுதான் எனக்கு மனுஷ்ய புத்திரன் கொடுத்த ஐடியா. அதாவது, அமீரின் திருட்டைப் பற்றி என் புலம்பல் தாங்காமல்தான் அவர் இப்படி ஒரு ஐடியாவைக் கொடுத்திருக்க வேண்டும்.
ஆனால் இந்தக் காலத்தில்தான் அசலுக்கு மதிப்பு இல்லையே? திருட்டுப் பொருளுக்குத்தானே அதிக மதிப்பு? அதன்படி எங்கள் சதித் திட்டம் தலைகுப்புறக் கவிழ்ந்து விட்டது. அதாவது, எல்லா வாசகர்களும் அந்தக் கவிதையை என்னுடைய கவிதை என்றே நினைத்து எனக்கு ஜன்னி வரும் அளவுக்குப் புகழ்ந்து தள்ளி விட்டார்கள்.
முதலில் என் வாரிசு கென். தன்னுடைய நூறு நண்பர்களுக்கு ‘என்னுடைய ’ கவிதையை அனுப்பி “டேய், தல கவிதை எழுத ஆரம்பிச்சிடுச்சு.. அதுவும் என்னா மாதிரி கவிதை... கவிதையா அது... உலக கவிதை... பாப்லோ நெரூதா ரேஞ்ஜுக்கு ஒரு கவிதை... இன்னிமே மவனே, தமிழ்நாட்டுல ஒரு பய கவிதை எழுதக் கூடாது, ஆமாம்... ” என்று கடிதம் வேறு எழுதி ஜமாய்த்து விட்டார். லக்கி லுக்கும் அப்படியே. இதே போல் பல நூறு வாசகர்கள் எனக்குப் பாராட்டுக் கடிதம் எழுதியிருந்தார்கள். பாராட்டு என்றால் இந்தப் பாராட்டு, அந்தப் பாராட்டு அல்ல.
எல்லாவற்றையும் விட அராஜகம் என்னவென்றால், மனோஜ் செய்ததுதான். போனில் அவர் சொன்னார். சாரு... நீங்கள் ஒரு கடவுள். அப்படியே உங்கள் காலில் விழுந்து விட வேண்டும் என்று தோன்றுகிறது. கவிதையா அது... காவியம் ... காவியம்... இந்த அளவுக்குக் கவிதை எழுதுவீர்கள் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை... எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை... அய்யய்யோ... உங்கள் காலில்...
எனக்குக் கூச்சம் தாங்க முடியாமல் அவர் பேச்சை குறுக்காக நிறுத்தி உண்மையைச் சொல்லி விட்டேன். ஆனால் நான் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை. நானும் மனோஜும் கிட்டத்தட்ட மனுஷ்ய புத்திரன் வீட்டின் உறுப்பினர்கள் மாதிரி. சாப்பாட்டைப் போடுங்கள்; அப்புறம் பேசிக் கொள்ளலாம் என்று கேட்டு சாப்பிடுகிற வீடு. மனோஜும், நானும் அங்கே தினம் தினம் செல்லும் ஆட்கள். அப்படிப்பட்ட மனோஜிடமிருந்தே இப்படி ஒரு போன் வந்ததும் நான் உண்மையில் ஆடிப் போய் விட்டேன். அடுத்து செல்வியிடமிருந்தும் “தல... பின்னிட்டிங்க போங்க... என்னத்த சொல்றது... கவிதையா இது... காவியம்... காவியம்... மனுஷ்ய புத்திரனிடம் மட்டும்தான் இதே சாயலை நான் பார்த்திருக்கிறேன்... ” என்று ஒரு போன் வரும் என்று பயந்து போனேன். அந்த அளவுக்கு மனுஷ்ய புத்திரனின் நெருங்கிய வட்டாரத்திலிருந்து எனக்குப் பாராட்டுகள் குவிந்தன. நல்லவேளை, மனுஷ்ய புத்திரனே என்னை அழைத்து “நல்ல கவிதை; என்னை மாதிரியே எழுதுகிறீர்கள் ” என்று சொல்லாமல் போனார்.
உங்களையெல்லாம் அல்லா வச்சுக் காப்பாத்த! ம்... நான் என்ன சொல்வது, எதைச் சொல்வது, எப்படிச் சொல்வது! உன்னத சங்கீதம் என்று ஒரு உன்னதமான கதையை எழுதியிருக்கிறேன். ஸீரோ டிகிரி என்று அதி உன்னதமான நாவல் எழுதியிருக்கிறேன். காமரூப கதைகள் என்று காமம் சொட்டச் சொட்ட ஒரு நாவல்... இதையெல்லாம் பாராட்டி ஒரு வார்த்தை இல்லை... மனுஷ்ய புத்திரனின் நாலு வரிக் கவிதையைத் திருடி எழுதியதும் கடவுள் என்கிறீர்கள்; காவியம் என்கிறீர்கள். ம்...? நான் எங்கே போய் முட்டிக் கொள்வது? மனுஷ்ய புத்திரனின் பெயரிலேயே இந்தக் கவிதை வந்திருந்தால் கூட இவ்வளவு பாராட்டியிருக்க மாட்டீர்கள் போலிருக்கிறதே... ‘ம்... இவன் இப்படித்தான் எழுதுவான் ’ என்று படித்துவிட்டுச் சென்றிருப்பீர்கள் அல்லவா?
உண்மையில் அமீர் ஜெயித்து விட்டார் ஐயா... திருட்டுக்குத்தான் இந்தக் காலத்தில் மவுசு... நான் என்ன நினைத்தேன் என்றால், கிராமத்தில் செய்வார்கள் இல்லையா, திருடனை மரத்தோடு கட்டி வைத்து செருப்பாலும், விளக்குமாற்றாலும் அடிப்பார்களே, அந்த மாதிரி அடிப்பீர்கள், அதை அப்படியே அமீருக்கு pass on என்று நினைத்தேன். உங்களுக்கு பீர்பால் கதை தெரியும்தானே? அக்பரைப் பார்க்க பீர்பால் போகிறார். முதல்முறையாக அரசவைக்குச் செல்கிறார். இன்னும் அவர் அக்பரின் மந்திரி ஆகவில்லை. அவர் கையில் அக்பரின் முத்திரை மோதிரம். அக்பர்தான் அவரை அரசவையில் வந்து பார்க்கும்படிச் சொல்லி மோதிரத்தைக் கொடுத்தது. இது தெரியாத வாயிற்காப்போன் பீர்பாலிடம் லஞ்சம் கேட்கிறான். உடனே பீர்பால் “நான் உள்ளே போய் மன்னரைப் பார்த்து விட்டு அவர் தரும் பரிசில் உனக்குப் பாதி தருகிறேன் ” என்று சொல்லி விட்டு உள்ளே செல்கிறார்.
அக்பர் “உமக்கு என்ன வேண்டும்? ” என்று கேட்க, எனக்கு சூத்தாமட்டையில் 50 பிரம்படி வேண்டும் என்று கேட்கிறார். ஏன் என்று அக்பர் விசாரிக்க, எனக்கு 25, வாயிற்காப்போனுக்கு 25 என்கிறார். பீர்பாலின் மதிநுட்பத்தைக் கண்ட அக்பர் அதிலிருந்துதான் அவரைத் தன்னுடைய மந்திரி ஆக்கிக் கொண்டார்.
ஆனால் அமீர் விஷயத்தில் பார்த்தால் ஆண்டி-க்ளைமாக்ஸ் ஆகி விட்டது.
என்னுடைய பல சினிமாத் துறை நண்பர்கள் சொன்னார்கள். இது பற்றி எழுதாதீர்கள்; அமீர் வருத்தப்படுவார் என்று. ஏன் ஐயா, நான் ஒரு காரியம் செய்கிறேன். பருத்தி வீரனை அப்படியே வங்காள மொழியில் வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை டப் செய்த மாதிரி எடுத்து, வங்காள நடிகர்களை வைத்து புதிதாக எடுத்து, கேமரா கோணத்திலிருந்து நடிகர்களின் காஸ்ட்யூம் வரை எதுவுமே மாற்றாமல் ஒரு வங்காள மொழிப் படமாகவே எடுத்து விட்டு ‘இயக்கம் : சாரு நிவேதிதா ’ என்று போட்டு வங்காளத்தில் ரிலீஸ் செய்து விடுகிறேன். பருத்தி வீரன் என்ற தமிழ்ப் படத்தைப் பற்றி சுத்தமாக மறைத்து விடுகிறேன். என் பெயர் வேறு சுத்த வங்காளப் பெயர். அப்படியே ஆஸ்கர் வரை அனுப்பி ‘சிறந்த வெளிநாட்டுப் படம் ’ என்ற பிரிவில் ஆஸ்கர் பரிசு பெறுவதற்குக் கூட வாய்ப்பு இருக்கிறது அல்லவா?
அப்படி நான் செய்தால் அமீர் ’ நம்முடைய நண்பர் சாருதானே, போனால் போகிறது ’ என்று விட்டு விடுவாரா?
***
மேற்கண்ட பகுதிதான் இந்த மாதம் நான் உயிர்மைக்கு எழுதிக் கொண்டிருக்கும் கட்டுரையின் ஆரம்பம். சென்ற மாதம் உயிர்மைக்கு எழுதவில்லை. வைரஸும் மனுஷ்ய புத்திரனும் காரணம். 10 புத்தகங்களை ஒரே நாளில் வெளியிட்டால் என்னைப் போன்ற ஒரு எளிய எழுத்தாளன் என்ன ஆவான்? பல நண்பர்கள் உயிர்மையில் என் கட்டுரை இல்லை என்றதும் கவலையுடனும் பதற்றத்துடனும் போனில் விசாரித்தார்கள். அவர்களின் அன்புக்கு நன்றி. ஆனால் என் கட்டுரை இல்லை என்றதும் சிட்லபாக்கம் உத்தமத் தமிழ் எழுத்தாளரும், தக்கலை எழுத்தாளரும் நிம்மதியாக உறங்கினார்கள் என்று கேள்விப்பட்டேன். இந்த மாதம் எல்லாவற்றுக்கும் சேர்த்து பேயாட்டம் இருக்கிறது.
அமீரின் யோகி தென்னாஃப்ரிக்காவில் தயாரான TSOTSI என்ற படத்தை அப்படியே திருடி எடுக்கப்பட்டது. தழுவி எடுக்கப்படவில்லை. டப் பண்ணியது போல் இஞ்ச் இஞ்ச்சாகத் திருடியிருக்கிறார்கள். உயிர்மையில் இருக்கிறது கச்சேரி. ஜனவரி மாத உயிர்மையைத் தவற விடாதீர்கள்.
பின்குறிப்பு: மனுஷ்ய புத்திரனின் ஜென்ம தினம் பற்றி என்னிடம் சண்டை பிடித்த துவரங்குறிச்சி தாசில்தார் தரங்கிணி மட்டும் உடனேயே கண்டுபிடித்து விட்டார். “என்ன மிஸ்டர், உங்களுக்கு மனுஷ்ய புத்திரன் என்று வேறு ஒரு புனைப்பெயர் இருக்கிறதா? ” என்று சண்டைக்கு வந்தார். எனக்குத்தான் பெண் என்றாலே பீதி ஆயிற்றே; அதனால் அவரிடம் மட்டும் உண்மையைச் சொல்லி விட்டேன்.
அதேபோல் கென், லக்கிலுக் போன்ற நண்பர்களும் விரைவிலேயே உண்மையைக் கண்டு பிடித்து விட்டார்கள். மனோஜ் மட்டும்தான் கடைசி வரை கடவுள் கடவுள் என்று கதறிக் கொண்டிருந்தார். இதையெல்லாம் பார்க்கும் போது எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. மனுஷ்ய புத்திரனோ மாதம் பத்து கவிதை கவிதை எழுதுகிறார். அதில் ஒரு இரண்டை நான் கடன் வாங்கி என் பெயரில் போட்டுக் கொண்டால் இப்படி ஒரு கடவுள் ஸ்தானத்தை எளிதில் அடைந்து விடலாம் போலிருக்கிறதே? மனுஷ்ய புத்திரனிடம் இது பற்றி ஒரு பேரம் நடத்தலாம் என்று இருக்கிறேன்; ’ வேண்டுமானால் ஜெயமோகனைத் திட்டி மாதம் ரெண்டு கட்டுரை எழுதிவிடுகிறேன்; அதற்குப் பிரதியாக எனக்கு நீங்கள் எழுதிய கவிதை ரெண்டை எனக்குக் கொடுத்து விட வேண்டும். ’ என்ன ஹமீத், சரியா?
4.12.2009.
10.13 p.m.
ஆகவே மக்களே சரியாக உறுதிப்படுத்திடாமல் சாருவின் கவிதையென்று அனுப்பி வைத்தமைக்காக வேறன்ன மன்னிக்க வேண்டுகிறோம்.
Labels: சாரு நிவேதிதா
நண்பரே!
தாங்கள் எழுதிய ’கவிதைத்தொகுப்பு வெளியிடுதல்’ கவிதையையும், ’இ.பி.கோ 307 அல்லது கொலை முயற்சி’ சிறுகதையையும் பூக்களில் இருந்து புத்த்கங்களுக்காக (http://mathavaraj.blogspot.com/2009/09/blog-post_09.html)பயன்படுத்திக்கொள்ளலாமா? அனுமதி வேண்டுகிறேன்.
மாதவராஜ் said...
December 06, 2009 9:24 AM
தங்கள் இ-மெயில் முகவரி தரலாமா?
மாதவராஜ் said...
December 06, 2009 9:24 AM